Sunday, February 11, 2018

மின்னணுவியல் நுட்பங்கள்-5

அத்தியாயம்-0
-----------------------
எலக்ட்ரானைத்தேடி...

கிமு:585-ல்   எலக்ட்ரான் !

 எலக்ட்ரான்  என்ற வார்த்தை  நகைகளில் அலங்காரக்கல்லைப்போலப் பயன்படுத்தப்படும் ஆம்பர் என்னும் ஒரு வகை மரப்பிஸினைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்ட  கிரேக்க வார்த்தையான  ilektron   என்ற வார்த்தையிலிருந்தே பிறந்தது !

எலக்ட்ரான் நகைகள்

ஆம்பர் பிஸினுக்குள் சிக்கியிருக்கும் கொசு
ஆம்பர் பிஸின்
மரப்பிஸினுக்கும் , அணுத்துகளுக்கும் என்ன சம்பந்தம் மொட்டைத்தலையும் , முழங்காலும் போல என யோசிக்கத் தோன்றுகிறதா ! ஆம்பர் பிஸினையும், அணுத்துகள் எலக்ட்ரானையும் முடிச்சுப் போட்டு ஒரு கதை இருக்கிறது. எலக்ட்ரானை அடிப்படையாக வைத்து செயல்படும் எலக்ட்ரானிக்ஸை கற்றுக்கொள்ளப்போகும் நாம் இந்த கதையை சும்மானாச்சுக்கும் தெரிந்து வைத்துக்கொள்வோம் !


 தாலஸும் எலக்ட்ரானும்

கி.மு. 585-ல்  தன்னிடமிருந்த ஆம்பர் நகைகளில் சேர்ந்த தூசியை , கம்பளித்துணியால் துடைத்து சுத்தம் செய்கிறார் கிரேக்க அறிஞர் தாலஸ். கம்பளியால் தேய்க்கப்பட்ட அந்த  ஆம்பர் பிஸின் மேலும் மேலும் தூசிகளை இழுத்ததே  அன்றி  சுத்தமான பாடில்லை, 

அந்த ஆம்பரின் அருகில் தாலஸ் ஒரு பறவையின் இறகை கொண்டு செல்கிறார் , ஆம்பர் அதனையும் இழுக்கிறது. பேய், பிசாசு, மாயம், மந்திரம் என்றெல்லாம் தாலஸ் இந்த நிகழ்வை முடிவுகட்டாமல்  இயற்கையை ஆராய்ந்து அறிய வேண்டும் என்கிற குறிப்போடு   "( ἤλεκτρον ) எலக்ட்ரானை   (γούνα) ஹூனாவால் தேய்க்கும் போது ஒருவித ஈர்ப்பு சக்தி ஏற்பட்டு அது தூசு, இறகு போன்றவற்றை ஈர்க்கிறது என்று எழுதி வைக்கிறார்.



தூசிகளை ஈர்த்த இந்த ஈர்ப்பு சக்திக்கு என்ன காரணம் என்பது கிட்டத்தட்ட 2000 வருசங்கள் கழித்து 1800 களில் தூசி தட்டப்படுகிறது. . .

------------------------------------------------------------------- கற்போம்...

0 comments:

Post a Comment